நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட நாகேஷ் செப்டம்பர் 27 1933-ல் கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு தாராபுரம் தொகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷின் முழு பெயர் நாகேஸ்வரன் நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
நாகேஷ் கல்லூரி படிப்பு முடிந்ததும் ரயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமைச்சு நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய டாக்டர் நிர்மலா நாடகத்தில் தை தண்டபாணி என்ற பாத்திரத்தில் தை தை என்ற நோயாளியாக மேடையில் குதித்ததால் தை நாகேஷ் என்றும் பின்னர் ஆங்கிலத்தில் தை என்பதை தாய் என்று மாற்றி படித்ததால் இவர் தாய் நாகேஷ் என்றும் அழைக்கப்பட்டார். 1959ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைபடத்தில் முதன் முதலாக நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். கே பாலச்சந்தர் கதை வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. எம்ஜிஆர், சிவாஜி, கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்றவர்களுடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் சிறந்த நடிப்பு திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன் கிண்ணம் நவகிரகம் எதிர் நீச்சல் நீர்க்குமிழி யாருக்காக அழுதான் அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்தபாபு இவர்தம் மகனாவர். நாகேஷ் அவர்கள் ஜனவரி 31 2009 இல் காலமானார்.