சென்னையில் மக்கள் குறைவாக பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெரும் வரவேற்பு பெற்ற திட்டங்களில் ஒன்று மாநகர பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து சேவை. ஆரம்பத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திய இந்த சேவைக்கு, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவேற்பு குறைந்து விட்டதாகவும், மக்கள் மிகக்குறைவாகவே பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாகவும், பள்ளிகள் திறக்கப்பட்டால் சிறிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 185 மினி பஸ்கள் தற்போது உள்ள நிலையில், அவற்றில் 115 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மினி பஸ்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் 70 மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டால் மினி பஸ்கள் முழுமையாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.