Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாக்குதல் நடத்திய வாலிபர்கள்… போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

வாலிபர்கள் கண்டக்டரை தாக்கியதை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கொந்தமூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் பயணிகளை அங்குள்ள பாலத்தின் மேல் இறக்கி விட்டு செல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று கொந்தமூர் கிராம மக்கள் கூறி வந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் கூறியதை பொருட்படுத்தாமல் தனியார் பேருந்து பாலத்தின் மேல் பகுதியில் நின்று பயணிகளை இறக்கி விட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் தனியார் பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டரை கடந்த 15ஆம் தேதி தாக்கினர். ஆனால் இந்த பிரச்சனையை பெரிய அளவிற்கு கொண்டு செல்லாத வண்ணம் அங்குள்ள பெரியவர்கள் சமரசம் செய்து விட்டனர். இந்நிலையில் திண்டிவனம் நோக்கி புதுவையில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து  கொந்தமூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் திடீரென எழுந்து கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கோபமடைந்த அந்த மூன்று வாலிபர்களும் கண்டக்டரை சரமாரி தாக்கி உள்ளனர்.

இந்த பேருந்து திண்டிவனத்திற்கு வந்த பிறகு அதில் பயணித்த மர்ம நபர்கள் பேருந்திலிருந்து இறங்கி உடனடியாக தப்பித்து விட்டனர். இதனை அறிந்த தனியார் பேருந்தின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் திண்டிவனத்தில் நடுரோட்டில் பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் ஒரே இடத்தில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விட்டது. ஏனெனில் இந்த சாலை வழியாகத்தான் சென்னை-விழுப்புரம், திண்டிவனம்-புதுகை மற்றும் சென்னை-திண்டிவனம் போன்ற மார்க்கத்திற்கு எந்த ஒரு வாகனமும் இயக்கப்படும்.

எனவே அந்த ஒரே இடத்தில் அனைத்து பேருந்துகளும் நின்றதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பயணிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |