வரலாற்றிலே முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் முன்னணி நாடுகளாக விளங்குவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த நாட்டில் சட்டப்படி எவ்வளவு காலம் வேலை செய்தாலும், வெளிநாடுகளில் இருந்து வேலை செய்பவர்களுக்கு குடியிருமை வழங்கப்படாது. மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டு குடியுரிமை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட சில குழுக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது ட்விட்டர் பதிவில், “முதலீட்டாளர்கள், தனித்தன்மை வாய்ந்தவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு குடியுரிமை வழங்க தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் இந்த புதிய முயற்சியில் நமது வளர்ச்சி பாதைக்கு பங்களிக்க கூடிய திறமை வாய்ந்தவர்களை பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மட்டுமல்லாமல் மற்ற வளைகுடா நாடுகளிலும் மொத்த மக்கள் தொகையில் 80% வெளிநாட்டவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருமை வழங்கப்படுபவர்களுக்கு புதிய UAE பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.