உலக நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து வழங்கும் இந்தியாவின் திறன் உலகிற்கு கிடைத்த மிக பெரிய சொத்து என்று ஐக்கிய நாடுகளின் செயலாளரான Antonio Guteress புகழ்ந்துள்ளார்.
உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனாவுக்கு எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் திறன் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளரான Antonio Guteress புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருவதை நான் அறிந்துள்ளேன்.
மேலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகளை தயாரித்து வழங்க தேவையான அனைத்து வசதிகளும் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் திறன் இந்த உலகிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து என்று நான் கருதுகிறேன். அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். இந்தியா இதுவரை 55 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி உள்ளது.
மேலும் ஓமான், Caricom என்று அழைக்கப்படும் கரீபிய நாடுகள், நிகராகுவா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் தடுப்பூசியை பரிசாக வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா ஒரு கோடி டோஸ் தடுப்பு ஊசியை ஆப்பிரிக்காவுக்கும் 10 லட்சம் டோஸ் தடுப்பூசியை ஐக்கிய நாடுகளின் சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியா கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை வர்த்தக ரீதியாக சவுதி அரேபியா , ஆப்பிரிக்கா, கனடா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.