உலக சுகாதார அமைப்பானது, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் பிரிட்டன், இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் முதன்மையில் உள்ளது. இதில் பிரிட்டன் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு முதல்நிலை தடுப்பூசிகளை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் செலுத்தி முடிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் இருக்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும், இலையுதிர் கால ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்களை செலுத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தார். எனினும் உலகில் பல்வேறு நாடுகள் தற்போது வரை தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவில்லை.
அதற்குள் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் முன்னுரிமை அளிக்கும் குழுக்களுக்கு இரண்டாவது டோஸை அளிக்க தொடங்கியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பானது பிரிட்டன் மிகவும் பாதிப்படைய கூடியவர்களுக்கு தடுப்பூசி அளித்த பின்பு தங்களின் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டுமென்று கோரியுள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்துவதில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் பல நாடுகளுக்கு நேரம் தவறாமல் சரியாக தடுப்பூசி அளிக்க உதவிகரமாக இருக்கும். மேலும் பிரிட்டன் போன்று தடுப்பூசி திட்டத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகளும் தங்கள் முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி செலுத்தியவுடன் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.