வீட்டின் பூட்டை உடைத்து, கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோபனபுரம் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உதவிக்காக அவரது மனைவியும், மகனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் 97 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.