அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் திடீரென்று முகக்கவசம் அணியாமல் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்-சில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முகக்கவசம் அணியாமல் கொரோனா தடுப்பூசி மையத்தின் நுழைவு வாயிலில் ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் டோட்ஜேர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து அடைக்கப்பட்டது.
திடீரென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை என்றாலும் தடுப்பூசி போட வந்தவர்களிடம் எதிர்ப்பாளர்கள் தடுப்பூசியை போடாதீர்கள் என்று கூச்சலிட்டனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் LAPD அதிகாரிகள் போராட்டக்காரர்களை அந்த இடத்திலிருந்து அகற்றினர்.
மேலும் போராட்டம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை . போராட்டக்காரர்கள் தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்ட போதிலும் நியமனங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை.மேலும் தடுப்பூசி போட வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்ஷெட்டியின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரியா கார்சியா தெரிவித்துள்ளார்.