நான் மட்டும் மருத்துவராக பணியாற்றியிருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பேன் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வந்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனாவிலிருந்து உலகம் விடுபட வேண்டி பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மருதமலை வந்துள்ளேன்.
நாம் இப்போது கொரோனாவிலிருந்து விடுபட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இடத்திற்கு நுழைந்து இருக்கிறோம். இந்நிலையில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவிலிருந்து காக்கும் ஊசியாக போடப்படுகின்றது. இது பரிசோதனை இல்லை. இது அவர்களுக்கு பரிசு என்று தான் நினைக்கிறேன். நான் மட்டும் மருத்துவராக பணியாற்றியிருந்தால் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பேன். தற்போது ஆளுநராக இருப்பதால் பொதுமக்களுக்கு போடும் சமயத்தில் போட்டுக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.