பிரிட்டனில் 13 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பிரிட்டனில் 13 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரின் லாங்க்ஸைட் என்ற பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தாக்கப்பட்ட 13 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் தற்போது அபாய கட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கூர்மையான ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுவனை கொடூரமாக தாக்கி விட்டு தப்பியதாக கூறியுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கருப்பு நிற உடை மற்றும் முகக்கவசம் அணித்திருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.