காப்பி பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளதால் அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குஞ்சப்பனை, கரிக்கையூர், அரவேணு, செம்மனாரை மற்றும் கீழ்த்தட்டபள்ளம் போன்ற ஏராளமான கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காப்பி செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிற்கு இரு முறை அறுவடை செய்யப்படும் இந்த காப்பி செடிகளில் தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால் சிவப்பு நிறங்களில் காப்பி பழங்கள் செடிகளில் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காப்பி செடி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அறுவடை சீசனில் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்துள்ள பழங்கள் அறுவடை செய்யப்படும் எனவும், ஒரு செடியில் அதிகபட்சமாக 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த பழங்கள் கிலோவிற்கு ரூபாய் 120 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து வியாபாரிகள் இந்த பழங்களை வாங்கி அதன் தோலை நீக்கி உலர வைத்து காப்பிக்கொட்டைகளாக மாற்றி வெளியிடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவை கிலோவுக்கு ரூ 400 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு சாகுபடி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.