2 கிலோ கஞ்சா மற்றும் 906 போதை மாத்திரைகளை கடத்திய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றம் போலீசார் சோத்துபாக்கம் சிக்னல் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 906 போதை மாத்திரைகள் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக பவானி நகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வரும் லோகேஸ்வரன் என்பவரையும், திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதோடு அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவள்ளுவர் தெருவில் வசித்துவரும் சூரியகுமார் என்பவரும், மணி என்பவரும் போதை மாத்திரைகளை இவர்களுக்கு விநியோகம் செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூரியகுமார் மற்றும் மணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.