ரேஷன் கடை விற்பனையாளர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் வடக்கூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் 250 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கவில்லை. அப்போது கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபோது, மறுநாள் விற்பனை செய்யப்படும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி மறுநாள் காலை நீண்ட நேரமாக பொதுமக்கள் ரேஷன் கடைக்கும் முன்பு நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் கடை திறக்காத காரணத்தால் கோபம் அடைந்த பொதுமக்கள் ஆரல்வாய்மொழி தி.மு.க பேரூர் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், ரேஷன் கடை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடனடியாக ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து மதியம் ஒரு மணிக்கு ரேஷன் கடை விற்பனையாளர் வந்து பொருட்களை விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளார். இவ்வாறு கடையை தாமதமாக திறந்து பொருட்கள் வினியோகம் செய்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.