சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் தாளமுத்துநகர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் பழையகாயல் புல்லாவழி பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் அவரிடம் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதோடு இந்த நபரின் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஜெயராஜின் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து விட்டனர்.