மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்ற நபருக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் சிக்கிய 3 பேரை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.