மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் மங்கலம் தொகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூருல்நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். பசீர் அகமது இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார்.
அப்போது இவரது மோட்டார் சைக்கிள் கீழக்கோட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ் மங்கலம் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.