தினமும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை அதிகம் அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவ்வாறான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேலாக அருந்துவோரின் சிறுநீரில் புரதம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுநீரில் புரதம் இருப்பது, சிறுநீரகங்கள் பணியை சரிவர செய்ய முடியாத நிலையை வெளிப்படுத்துகிறது. ஆகவே சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், தேனீர், காபி போன்ற சூடானவையாக இருந்தாலும், சோடா, கோலா போன்ற குளிர்பானங்களில் இருந்தாலும் குறைவாக அருந்துவது அல்லது முற்றிலும் தவிர்ப்பதே நல்லது. அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.