கால்வாயில் திடீரென ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்ததால் குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் குளத்தில் நாஞ்சில் புத்தனார் கால்வாய் இருக்கின்றது. இந்த கால்வாயில் குளிக்க சென்ற நபர்கள் வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வருவதைக் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் அந்த 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
ஆனால் அந்த பெண்ணின் பெயர் மற்றும் ஊர் குறித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனையடுத்து அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண் யார் என்றும், அவர் மரணத்திற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.