Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தை… மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் மூன்றாவது மகள் லட்சுமி பிரபா வுக்கும் கிஷோர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அப்போது தந்தை இல்லாததை எண்ணி லட்சுமி பிரபா மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். தனது தங்கையின் வருத்தத்தை அறிந்துகொண்ட லண்டனில் மருத்துவராக பணியாற்றும் மூத்த சகோதரி புவனேஸ்வரி, அவருடைய கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் லட்சுமி பிரபாவின் வருத்தத்தைப் போக்க முடிவு எடுத்தனர். இதனையடுத்து உயிரிழந்த செல்வத்தின் உருவத்தை பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிலையாக வடிவமைத்தனர்.

அந்த சிலை 6 லட்சம் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று பட்டுக்கோட்டையில் நடந்த தங்க லட்சுமி பிரபா திருமண விழாவிற்கு இருவரும் சென்றனர். அப்போது மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவச் சிலையை புவனேஸ்வரி திடீரென்று மேடைக்கு கொண்டு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது தந்தையின் சிலையைப் பார்த்த லட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அதன் பிறகு தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தந்தை சிலைக்கு அருகே நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |