பட்டுக்கோட்டை அருகே மறைந்த தந்தையின் சிலையை உருவாக்கி தங்கை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அந்த சிலையை நிறுத்தி அதன் முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த தொழிலதிபர் செல்வம், இவரது மனைவி காலாவதி. கடந்த 2012ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டா.ர் செல்வம் உயிருடன் இருக்கும்போது மூன்று மகள்களில் இரண்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு செல்வத்தின் மூன்றாவது மகள் லட்சுமி பிரபா உடன் கிஷோர் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. லட்சுமி பிரபா தந்தை இல்லாத குறையை எண்ணி வருத்தமாக இருந்தார்.
இதனை நிறைவேற்றும் பொருட்டு லண்டனில் மருத்துவராக உள்ள மூத்த சகோதரி புவனேஸ்வரி மற்றும் அவரது கணவரும் சேர்ந்து தந்தை செல்வத்தின் சிலையை உருவாக்க முடிவு செய்து சிலிக்கன் மற்றும் ரப்பரால் சிலையை உருவாக்கினர். பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவ சிலையை மேடைக்கு கொண்டு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். லட்சுமி பிரபா கண்ணீர் வடித்தார்.
மேலும் தந்தையின் சிலையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று மணமக்கள் இருவரும் தங்களது மாலையை மாற்றிக் கொண்டனர். சுமார் 6 லட்சம் செலவில் தந்தையை சிலையை உருவாக்கியதாக அவரது சகோதரி கூறினார். இந்த சிலையை கண்ட எனது தங்கை ஆனந்த கண்ணீர் விட்டு அழுதது எங்கள் அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.