தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
சென்னை மாவட்டத்தில் கூலி தொழிலாளியான பொன்னன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்துவிட்டு அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் பொன்னன் அவற்றை தர மறுத்ததால் கோபத்தில் அவரை சரமாரி தாக்கி விட்டு அந்த நபர்கள் அவரிடம் இருந்த 1,500 ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்த போது, சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் பாபு என்பவரும், திவாகர் என்பவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக நடந்து செல்லும் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் செல்வதை ஒரு தொழிலாக வைத்துள்ளனர். இவர்கள் அங்கு வருபவர்களை மிரட்டி பணம் பறிக்கும் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து அதன்பின் புழல் ஜெயிலில் அடைத்து விட்டனர்.