திமுக கட்சியானது பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் பரப்பி வருவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கட்சியின் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக்களை கேட்டு வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவு செய்த பிறகுதான் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சசிகலா வெளியில் வந்து அ.தி.மு.க கொடியை பயன்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும், அது அ.தி.மு.க-வின் கட்சிக்குள் நடைபெறும் பிரச்சனை எனவும் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொய்யான அறிவிப்புகளை பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க பரப்பி வருவதாக கூறியுள்ளார். மேலும் தி.மு.க தனது கொள்கையில் உறுதியாக இல்லை எனவும், அடிக்கடி தங்களது முடிவை மாற்றிக் கொள்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு வேல் பரிசாக வழங்கிய போது மு.க. ஸ்டாலின் அதனை வேண்டாம் என்று தவிர்த்தது குறித்து அவர் இன்று பெறுவார், நாளை காவடி எடுப்பார் என சரத்குமார் கூறியுள்ளார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய, கல்வி மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக பொய்யான வாக்குறுதிகளை பரப்புகின்றனர் என்றும, மக்கள் இவர்களது வாக்குறுதிகளை நம்புவதற்கு வாய்ப்பில்லை என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.