நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஒரே நாளில் தியேட்டரிலும், ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ . இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த வருடம் மே மாதம் ரிலீசாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது . இதையடுத்து இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக வெளியான தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. ரசிகர்களும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த படத்தை ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் இந்தியாவில் திரையரங்கில் வெளியிடும் அதே நாளில் வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது . இதையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது . தற்போது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரிலீஸாக திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா ? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது . விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .