குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாவாத்மால் கிராமத்தில் 1 முதல் 5 வயது வரையிலான 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக ஊழியர்கள் தவறுதலாக கிருமிநாசினி கொடுத்துவிட்டனர்.
இதனால் அங்கு இருந்த ஒரு குழந்தை வாந்தி எடுத்ததால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது தான் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து க்கு பதிலாக கிருமிநாசினி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கிருமிநாசினி தவறுதலாக கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 3 சுகாதாரத்துறை ஊழியர்கள், அங்கன்வாடி செவிலியர்கள் மற்றும் ஒரு டாக்டர் அந்த இடத்தில் இருந்திருக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் 3 சுகாதாரத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.