இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை மர்ம நபர் இருவர் சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் நள்ளிரவு திரைப்படம் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஹரிஷிடம் தமக்கு யாரும் உதவவில்லை. நீங்களாவது கொஞ்சம் லிஃப்ட் தாங்களேன் என்று கேட்டுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்டு ஹரிஷ் அவர் சொன்ன இடத்திற்கு தமது இரு சக்கர வாகனத்தில் சென்றார். சிறிது தூரம் சென்றதும் வேறொருவரும் ஹரிஷ் சென்ற வாகனத்தை நிறுத்தி தமது உறவினருக்கு உடல்நிலை சரியில்லை. அவர்களை பார்க்க அவசரமாக செல்ல வேண்டும் என்று கூறி லிஃப்ட் கேட்டுள்ளார்.
பரிதாபப்பட்ட ஹரிஷ் அவரையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். சிறிது தூரம் சென்றதும் லிஃப்ட் கேட்ட இருவரும் ஹரிஷை வண்டியிலிருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். அதன்பின் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து ஹரிஷின் மீது ஊற்றி தீ பற்ற வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
சிறிது நேரம் கழித்து இதனை கண்ட அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஹரிஷின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன்பின் ஹரிஷின் குடும்பத்தாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.குடும்பத்தாரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.