டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் டெல்லி எல்லையில் பல்வேறு தடுப்புகளை போட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் அத்துமீறி நுழைந்த விவசாயிகளை போலீசார் கடுமையாக தாக்கியதால் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியின் முக்கிய எல்லை பகுதிகளில் விவசாயிகள் நுழைவதை தடுக்க சிமெண்ட் தடுப்புகள், காங்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரி கார்டுகள், முள் வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. போராட்டம் நடத்துவதை தடுக்க சாலைகளில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லைகளில் தற்காலிக தடுப்பு சுவர்களை அமைக்கும் பணியிலும் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமன்றி முள்வேலி அமைத்து டெல்லி எல்லைகளை மூடி வருகிறது.