வீட்டின் பூட்டை உடைத்து தங்க கைக்கடிகாரம் உள்ளிட்ட நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியை சார்ந்த குருநாத பிரபு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கொரோனா ஊரடங்கிற்காக இவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி திவ்யா கர்ப்பிணியாக இருப்பதனால் திவ்யாவும் அவரது பெண்குழந்தையும் திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
மனைவியை பார்ப்பதற்காக சென்ற குருநாத பிரபு நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த குருநாத பிரபு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்கக் கைகடிகாரம் சில நகைகள் மற்றும் 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி குருநாத பிரபு பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு சோதனை செய்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.