அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்ப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இப்படிப்புக்கு நுழைவு தேர்வு விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குளழி ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்தல் 2020 -21 ஆம் ஆண்டில் இந்த இரு எம்டெக் பட்டமேற்படிப்பு களுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.டெக் படிப்புகளுக்கு தமிழக இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த படிப்புகளை ரத்து செய்துள்ளதால் 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன் ? என நாளை எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.