விவசாயிகள் மீதான ஒடுக்குமுறைகளை கைவிடும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத் கிஷான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.
மத்திய பாரதிய ஜனதாவின் அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 68 நாட்களாக நீடிக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத் கிஷான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையில் அகழிகள் தூண்டுவது, இரும்பு ஆணிகளை பதிப்பது , சாலைகளை மூடுவது, இணைய சேவையை தடுப்பது என போராட்டத்தை முடக்க போலீசார் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த அடக்கு முறைகளை கைவிடுவதோடு டிராக்டர் பேரணி தொடர்பான வன் முறையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என சம்யுத் கிஷான் மோர்ச்சா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் விவசாயிகள் எங்கும் போக்குவரத்தை தடை செய்யவில்லை எனவும் போலீசார் போக்குவரத்தை முடக்கி வைத்துள்ளதாகவும் பாரதிய கிசான் ஜூனியனின் தலைவரான திரு ராகேஸ் திகே தெரிவித்துள்ளார்.