என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். இருந்தாலும் அமமுகவிற்கு தொடர்ந்து தனது பணியை செய்து வந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை மிக கடுமையாகவும், ஆபாசமாகவும் திட்டிய வாட்சப் ஆடியோ ஒன்று வெளியாகி அமமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆடியோ குறித்து டிடிவி தினகரன் இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரேடியோவில் கொடுத்த பேட்டி தொடர்பாக தங்க தமிழ்செல்வன் என்னிடம் விளக்கம் அளித்தார். இது குறித்து அவரை நான் எச்சரித்தேன். ஊடகங்களிடம் சரியாக பேச சொன்னேன். சரியாக பேசவில்லை என்றால் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவேன் என்றேன்.
தங்க தமிழ்செல்வனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அச்சமோ, தயக்கமோ இல்லை. மதுரையை சேர்ந்த நிர்வாகியிடம் தான் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார். தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். தங்கதமிழ்செல்வன் பின்னால் இருந்து யாரோ அவரை இயக்குகிறார்கள்.
அமமுகவில் இருந்து விரைவில் தங்க தமிழ் செல்வன் தேனி மாவட்ட செயலாளர், கொள்கைபரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார். விரைவில் புதிய கொள்கைபரப்பு செயலாளர் அறிவிக்கப்படுவார். யாரோ சொல்வதை கேட்டு தங்க தமிழ் செல்வன் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். எனக்கு அறிவுரை சொல்ல தங்க தமிழ்செல்வன் யார்? எப்போதும் வேறுபட்டு செயல்படுவது தங்க தமிழ் செல்வனின் வாடிக்கை” என்று அவர் தெரிவித்தார்.