புதுச்சேரியில் 16 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன பெற்றோர் இரவு 11 மணிக்கு சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதனைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அந்த சிறுவன் தொடர்ந்து 4 மணி நேரமாக கேம் விளையாடியதால் தான் இறந்து விட்டானா அல்லது வேறு ஏதும் நோய் காரணமாக இறந்தானா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. உடல் பரிசோதனைக்கு பிறகு உண்மை தகவல் வெளிவரும். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.