இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதித்தது சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வராத வகையில் விமான சேவைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் உருமாறிய கொரோனா உலக நாடுகளில் அதிக அளவு பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வர தடை விதித்தது சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் இருந்து தூதரக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 20 நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு சென்று வந்திருந்தால் அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.