சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தோழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் போலீஸ் அமைப்பான தோடி பிரிவின் பயிற்சி முகாமை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “மக்கள் நல திட்டங்கள் பலவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வீட்டிலிருந்தே வாட்ஸப்பில் புகார் அளிக்கும் திட்டம், ரோந்து வாகனத்தில் புகார் பெறும் திட்டம், சைபர் காவல் நிலையங்களை நிறுவுவது போன்ற விஷயங்கள் நமக்கு நல்ல பலனை தருகின்றன. இந்தியாவிலேயே பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாக சென்னை மட்டும்தான் திகழ்கிறது.
தோழி திட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு உளவியல், சமூக, சட்ட மற்றும் மனரீதியான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றோம். இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் இதை கடமையாகச் செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தற்போது வரை பாதிக்கப்பட்ட 400 பெண்களுக்கு தோழி திட்டத்தில் உரிய முறையில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. அதனால் உளவியல் ரீதியாக மற்றும் சட்டரீதியாக வழக்கை நடத்தி வருகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.