மத்திய அரசிடம் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றுவதற்கான திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்காகவோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினால் சுமார் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை என்று சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமானது இமாச்சல பிரதேசத்தில் முன்னரே இருக்கிறது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்து பெண்களை திருமணம் செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கு மக்களவையில் எழுத்து பூர்வமான முறையில் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சரான கிஷன் ரெட்டி, மதமாற்றங்கள் அல்லது மதத்தை எதிர்த்து நடத்தப்படும் திருமணத்தை எதிர்த்து சட்டம் நிறைவேற்றுவதற்கான திட்டம் மத்திய அரசிடம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.