அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு சில நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த அமீலியா பிரவுன் என்ற பெண் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி சில தினங்கள் கழித்து தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் ஊறல் ஏற்பட்டதோடு அந்த இடம் சற்று வீங்கிய நிலையில் சிவந்து காணப்பட்டுள்ளது. எனவே அவர் இரண்டாவதாக தடுப்பூசி செலுத்துவதை எண்ணி கவலையடைந்துள்ளார். மேலும் இவரை போன்று வேறு சில நபர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் இதனை சிலர் “கொரோனா கை” என்று கூறுகிறார்களாம்.
இது குறித்து நோய் எதிர்ப்பியல் நிபுணரான டாக்டர் பிரவீன் படீகாகூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் இரண்டு முதல் ஒன்பது சதவிகித மக்களுக்கு இதுபோன்று ஏற்படலாம் என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் இவ்வாறு ஏற்படலாம் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் பயப்பட வேண்டியதில்லை என்றும் இது 48 மணி நேரத்தில் மறைந்து விடும் என்றும், இதுபோன்று ஏற்பட்டால் உடனடியாக ஐஸ்கட்டி வைக்குமாறும், நீர் பருகுங்கள் மற்றும் கைகளை நீட்டி மடக்கினால் 24 மணி நேரத்திற்குள்ளாக கையில் உண்டான காயம் மறைந்து விடும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.