ஹரியானா ஹோட்டலில் சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து லாரியில் பாக்கு ஏற்றிக்கொண்டு பொன்ராஜ் மற்றும் நிஹித் ஆகிய இருவர் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் ஹரியானா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு நேரத்தில் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் அங்குள்ள ஒரு அறையில் ஓய்வு எடுத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இந்த தகவலானது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து அவர்கள் சாப்பிட்ட உணவில் நஞ்சு கலந்து உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.