குளத்திற்கு குளிக்க சென்றபோது தொழிலாளி திடீரென நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்தவர் கண்ணன்-லட்சுமி தம்பதியினர். கண்ணன் கொட்டகை போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி மாலை கணவன் மனைவி இருவரும் குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். லட்சுமி குளக்கரையில் அமர்ந்திருக்க கண்ணன் குளத்தில் இறங்கி நீச்சலடித்து குளத்தின் மறு கரைக்கு சென்று விட்டு மறுபடியும் மனைவி அமர்ந்திருந்த கரைக்கு திரும்பியுள்ளார். திரும்பும் வழியில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் கை காட்டி சைகை செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறி கொண்டே நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைக் கண்ட லட்சுமி கண்ணனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் விரைந்து வந்து கண்ணனைத் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அதனால் இரவு முழுவதும் குளத்தை சுற்றி பாதுகாப்பு போட்டிருந்தனர். குளத்தின் அருகில் கண்ணனின் மனைவியும் உறவினர்களும் சோகத்தில் அமர்ந்திருந்தனர்.
பின்பு காலை 7:00 மணியளவில் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கண்ணனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இதைக் கண்டதும் கண்ணனின் மனைவி கதறி அழுதுள்ளார். பின்பு சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.