கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன் வர்ஷினி மீண்டும் கனகராஜின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முறையிட்டுள்ளார். மீண்டும் கனகராஜின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கனகராஜின் அப்பா கருப்பசாமி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் சீரங்கராயன் ஓடை பகுதியில் ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். கடந்த 3 நாட்களாக இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத் குமார் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று தம்பி கனகராஜிடம் அவளை திருமணம் செய்ய கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால் வினோத் கனகராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை கால், தலையில் பலத்த வெட்டுபட்டு கனகராஜ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் வர்ஷினியையும் வினோத் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வர்ஷினி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கோவை மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் தலைமறைவாக உள்ள வினோத்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் வினோத்குமார் இன்று காலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.