டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விராட்கோலி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் அத்துமீறி நுழைந்த விவசாயிகளை போலீசார் கடுமையாக தாக்கியதால் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தங்கள் ஆதரவை விவசாயிகளுக்கு தெரிவித்து சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பதிவிட்டு வருகின்றனர். சிலரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பதிவிட்டால் ட்விட்டரில் பெரும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். அதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சமூக தீர்வை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். #indian Against propaganda, #India Together” என்று அவர் பதிவிட்டுள்ளார்.