மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜானகிராமன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் குமார் என்ற மகன் உள்ளார். இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் குமார் தனது நண்பர்களான சஞ்சீவி மற்றும் பரத் ஆகிருடன் திருவள்ளூரில் இருந்து அதிகத்தூரில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிள் திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வேகமாக வந்த மினி வேன் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் இந்த மூன்று சிறுவர்களும் பலத்த காயமடைந்ததை பார்த்த வேன் டிரைவர் வேனை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இந்த மூன்று பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சஞ்சய்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதோடு பலத்த காயமடைந்த சஞ்சீவி மற்றும் பரத் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கடம்பத்தூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மினி வேன் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.