முருகன் நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வேண்டி ஜெயில் சூப்பிரண்டு ருக்மணியிடம் மனு அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கணவன் மனைவியான முருகன் மற்றும் நளினி வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முருகன் நளினி சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் வீடியோ கால் பேசிக் கொள்ள கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
அவ்வாறு நளினியோடு முருகன் பேசும் போது தனது உறவினர்களுக்கு பேச முயன்றுள்ளார். அந்த சமயத்தில் காவலர்களிடம் அவர் பிடிபட்டுள்ளார். இதனால் சிறை காவலர்கள் மேல் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் பேரில் அவர் செல்போனில் நளினியோடு பேசுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் முருகன் வேலூர் ஜெயிலில் 25 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்பு டாக்டர்களின் அறிவுரையின் பேரில் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். இந்நிலையில் முருகன் வேலூர் ஜெயிலில் இருக்கும் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.