திருமண வயது பூர்த்தியடையாத மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது 14 வயதுடைய அந்த சிறுமிக்கும் 19 வயதுள்ள வாலிபனுக்கும் நேற்று காலை விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்த மாணவிக்கு 18 வயது நிரம்பாத காரணத்தினால் அந்த திருமணம் செல்லத்தக்கது இல்லை என்பதை தெரிவித்த அதிகாரிகள் இருதரப்பு பெற்றோரிடமும் மாணவிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் செய்யக் கூடாது என்று எழுதி வாங்கியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை குழந்தைகள் நலகுழுமத்தின் முன்பாக ஆஜர் படுத்தியுள்ளனர்.