சசிகலாவை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் சிகிச்சையை முடித்துவிட்டு சசிகலா தமிழகத்திற்குத் திரும்பவுள்ளார். சசிகலாவின் ஆதரவாளர்களான அதிமுகவினர் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாதன் தலைமையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதாக உள்ளது. இது குறித்து ஜெயந்தி பத்மநாதன் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரமிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் “சசிகலா சென்னை நோக்கி வரும் போது அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏ என்ற முறையில் அவருக்கு கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் அந்த சமயத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதன் மூலமாக மலர் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு தக்க அனுமதியை வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சசிகலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.