தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை போன்றும் இருக்கின்றது. ஆனால் இது பழங்கால சிலை போல் காட்சி அளிக்கவில்லை. இந்த சிலையை பார்த்ததும் முறப்பநாடு காவல் நிலையத்திற்கு அப்பகுதியில் வசிப்பவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சிலையை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த சிலை கிடைத்த தாமிரபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் என்பவர் பார்வையிட்ட பிறகு, அந்த சிலை வைக்கப்பட்டுள்ள முறப்பநாடு காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் இந்த சிலை குறித்து வழக்குப்பதிவு செய்த முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் இந்த அம்மன் சிலையை முறைப்படி தாசில்தாரிடம் ஒப்படைக்கவும், அதன் பின்னர் இந்த சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.