நாம் தமிழர் கட்சியின் பிரச்சார ஜீப் உடைக்கப்பட்டு கொடிமரமும் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கோட்டை கடை வீதி பகுதிகளில் வசிப்பவர் இஸ்மாயில். இவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அரவிந்தனிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் உறுப்பினரான முருகேசன், கார்த்திக், கணேசன் ஆகியோர் ஜீப்பை இங்கு நிறுத்தக் கூடாது என இஸ்மாயிலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து வழக்கம்போல் மறுநாள் காலை ஜீப்பை எடுப்பதற்காக இஸ்மாயில் வந்துள்ளார். அப்போது ஜீப்பின் கண்ணாடி உடைந்திருந்ததை கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுறிச்சி அருகிலிருக்கும் நாம் தமிழர் கட்சியின் கொடி மரமும் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொகுதியின் செயலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கணேசனை கைது செய்துள்ளனர். மேலும் இருவர் தப்பிச் சென்றதால் அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.