Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தப்பு பண்ணுனா இதான் கதி… பெண் அதிகாரி சஸ்பென்ட்… ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சமூக நல விரிவாக்க அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திருமண நிதி உதவி சட்டத்தின் கீழ் தனது மகளுக்கு திருமண உதவித்தொகை வேண்டி தீர்த்தம் கிராமத்தில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சமூக விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி என்பவர் திருமண உதவி தொகை ஒப்புதல் அளித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால் 1500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனை விரும்பாத ராமலிங்கம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்து விட்டார்.

இதனை அடுத்து சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பெயரில் ராமலிங்கம் கொடுத்துவிட்டார். அப்போது ஜெய லட்சுமியை கையும் களவுமாக அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விட்டனர். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலட்சுமியின் மீது லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் சமூக நல பாதுகாப்பு அலுவலர், சென்னை சமூக நலத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி ஆணையர் ஜெயலட்சுமி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |