மலையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டு அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலையின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து விட்டது. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீயானது பல இடங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்து உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனக்காவலர்கள், வன ஊழியர்கள் மற்றும் வனக் காப்பாளர்கள் அனைவரும் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபனின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பின் அனைவரும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும் தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருவதால் இந்தத் தீ விபத்தில் சிக்கி வனவிலங்குகள் இறக்கக்கூடும் என அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மலையில் பற்றி எரிந்த இந்த தீயை சிலர் நாகர்கோவிலில் வீட்டு மாடியில் இருந்தவாறு பார்த்துள்ளனர். மலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.