பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை காலதாமதம் ஆக ஜெயலலிதா நழுவவிட்டது காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், 2014 பிப்ரவரி 18ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை சதாசிவம் பேரறிவாளன், முருகன் சார்ந்த 18 பேரின் மரண தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக குறைக்கின்றார்கள். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அடுத்த நாளே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 7பேர் விடுதலை தொடர்பான கோப்புகளை எல்லாம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்பொழுதும் மத்திய அரசு வந்து தலையிட்டு தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். சிபிஐ இந்த வழக்கை விசாரித்தால் 7பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கோ, ஆளுனருக்கோ அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. தற்போதும் அதே நிலைப்பாட்டை தான் மத்திய அரசு எடுக்கிறது. மத்திய அரசின் தலையீட்டின் காரணமாகத்தான் இரண்டு முறை பேரறிவாளன் விடுதலை தடைபட்டு நிற்கிறது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,
சதாசிவம் வருகை இந்திய தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் மூலமாக வழங்கிய தீர்ப்பு மாநில அரசிற்கு அதிகாரம் இருக்கின்றது, அவர்களை விடுவித்து இருக்கலாம் என்பது தெளிவாக இருந்தது. அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் விரும்பியிருந்தால் அவர்களை விடுவித்து இருக்கலாம். அப்படி விடுவித்து இருந்தால் அவர்கள் ஆட்சியை ஒன்றும் கலைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பை அவர் நழுவ விட்டு விட்டார். மத்திய அரசிடம் அந்தப் பொறுப்பை தள்ளிவிட்டார். அதனால்தான் இவ்வளவு பெரிய சிக்கல் நீடிக்கிறது என்பது விடுதலை சிறுத்தையின் கருத்து என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 7பேர் விடுதலை விவகாரத்தில் திமுகவை அதிமுக விமர்சித்து வந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் தற்போது கூறியுள்ள கருத்து தமிழக அரசியல் விவாதத்தில் புதுகுண்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.