கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தை சார்ந்தவர் அம்பிகாபதி-சுலோச்சனா தம்பதியினர். இவர்கள் சின்னசாமி நகரில் இருக்கும் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு கும்பாபிஷேக விழா முடிந்ததும் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் நகைகள் காணாமல் போனதை அறிந்து கோவில் பகுதிகளில் தேடியுள்ளார்.
ஆனால் நகைகள் கிடைக்கவில்லை என்பதால் கோவிலில் உள்ள கூட்டத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் பறித்திருக்கலாம் என்று நினைத்து அம்பிகாபதி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.