வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீஸ் உடை அணிந்து பண வசூலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாலிபர் ஒருவர் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்துள்ளார். அப்போது வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கும் போதும் அவர் பணத்தை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் நாற்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ் உடையில் இருந்த வாலிபரை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் போலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் முருகதாசை கைது செய்து இதுபோன்று வேறு எங்கேனும் பண வசூலில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.